Monday, 28 January 2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம் பெயர் ஆதரவாளர்களுக்கு….

இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வும், சமாதானமும் அமைதியும் நிலவும் போரற்ற சூழலில் சகலரும் வாழும் ஒரு நிலையும், எப்போது வரும் என்று நீங்களும் எதிர்பார்ப்பீர்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே அவற்றை அடைவதற்கு உதவும் முகமாக சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது பயனளிக்குமென நம்புகிறோம்.

தாயகத்தில் வாழும் எமது மக்கள் உயிருடன் வாழ்ந்து, உழைத்து, போரற்ற சூழலில், சுயகௌரவத்துடன், தமது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக நேசித்து வளர்த்து, அவர்கள் வளர்ச்சியில் மனநிறைவெய்த சமாதானமும் நியாயமுமான தீர்வும், போருக்கான முடிவும் ஏற்பட நீங்கள் உதவ முன்வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அனைவரும் சரியான வழிமுறைகளுக்கு ஒத்துழைப்போமானால் காலக் கிரமத்தில் இந்த இலக்குகளை அடைவது இலகுவாக இருக்குமென நாம் நம்புகிறோம். கடந்த முப்பது வருட போரினால் எமது மக்கள் அடைந்த துன்பங்களும் - துயரங்களும் - இன்னல்களும் - இழப்புகளும், இன்னும் ஒரு வருடமேனும் தொடரக் கூடாதென்பதே எமது பேரவாவாகும். அளவிலா அன்புடன் தாயக மக்களை நேசிக்கும் உங்கள் உள்ளம், உங்களைப் போலவே அவர்களும் வாழ விரும்புவதை, ஏங்குவதை உணர்ந்து கொள்ள ஒரு கணம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எமக்கு நியாயமான தீர்வு வர வேண்டுமெனில் எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை எதிர் தரப்பு முன் வைக்க வேண்டுமென்பது எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். எமது போராட்ட வழிமுறைகள் அனைத்தும் அதனை ஊக்குவிப்பதாக - அவர்கள் அதனை முன் வைப்பதை இலகுவாக்குவதாக இருக்க வேண்டும். எமது சாம - பேத - தான - தண்ட போராட்ட வழிமுறைகள் அனைத்தும் எதிர் தரப்பின் செயல்பாட்டை இலகுவாக்குவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய தீர்வு முன்வைக்கப்படுவது சாத்தியமாகும். எமது போராட்டமும் வெற்றி பெறும். மாறாக எமது நடைமுறைகள் அனைத்தும் அவர்கள் நியாயமான தீர்வொன்றை முன்வைப்பதை தோற்கடிக்கும் செயல்முறைகளாக இருக்குமெனில் நாம் தோல்வியடைவதும் தவிர்க்க முடியாததாகும். அத்தகைய போராட்ட வழிமுறைகள் எமது மக்களின் நிகழ்கால எதிர்கால நல்வாழ்வை நாசமாக்குவதின்றி வேறு எதனையும் சாதிக்க போவதில்லை.

பொதுவாக, அனைவருக்கும் இயல்பாக தோன்றும் உணர்வுகளைப் போலவே நாமும் எமது நலன்கள், எமது உரிமைகள், எமது பாதுகாப்பு என்று மட்டுமே உணர்ச்சிவசப்பட்டுக் கொள்வதால், எமது பக்க கோரிக்கைகளின் நியாயங்களும், அதனை வெளிப்படுத்தும் முறைகளை நியாயப்படுத்தும் தன்மையுமே எமது சிந்தனையில் மேலோங்கி இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. எமது ஒரு பக்கப்பார்வை எமது உணர்வுகளைத் திரித்து, எமது சிந்தனையும் செய்கைகளும் எம்மை அறியாமலே இயல்பாக மாற்றமடைந்து, நாம் தவறிழைப்பதை இலகுவாக்கும். அதனை நியாயப்படுத்துவதை இன்னும் உறுதியாக்கும். பிரச்சார ஊடகங்கள் ஏற்படுத்தும் உணர்வலைகள் சாத்தியமான மாற்று அணுகுமுறைகள் பற்றி சிந்திப்பதை தவிர்த்துவிடும்.

எமது உரிமை, எமது நலன், எமது பாதுகாப்பு என்ற பார்வை தேவையெனினும், அதற்குள்ளேயே நம்மைக் குறுக்கிக் கொள்வதால் எதிர்தரப்பு தனது நலன்கள், தனது உரிமைகள், தனது பாதுகாப்பு பற்றி முன்வைக்கும் நியாயங்களையும் அதற்கான காரணங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அறியவும், அவர்களை எமக்கு சாதகமான நியாயமான தீர்வுகளை முன்வைக்கும் வகையில் நகர்த்துவது எப்படி என்று ஆராயவும் தவறி விடுகிறோம்.

அவர்கள் பக்கமுள்ள நியாயமான வாதங்களை புரிவதும் அதற்கான உத்தரவாதங்களை வழங்குவதும், நியாயமான தீர்வினை அவர்கள் முன்வைக்கக் கூடிய கவர்ச்சியுள்ள பொருளாக மாற்றுவதும் எமது கடமையாகும். இதனை நாம் செய்ய இயலாத பட்சத்தில் இருசாராரும் ஏற்றக்கொள்ளும் ஒரு அரசியல் தீர்வு சாத்தியமில்லை.

இலங்கை அரசு நியாயமான தீர்வினை முன்வைக்க சிங்கள இனவாத சத்திகளின் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க உதவும் வகையில் நாம் மேற்கொண்ட செயல்முறைகள் எவை?

விடுதலைப்புலிகளின் பெரும்பாலான செயல்முறைகள் பேரினவாத சத்திகளை தூண்டிவிடுவதையே சாதித்துள்ளன. அவர்கள் கக்கும் விஷமே எமது மக்களுக்கு விமோசனம் தரும் என்றும், அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் அழிவுகளே எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்ற வகையிலுமே செயல்படுகிறோம். எமது அழிவுப் பாதையை நாமே தெரிவு செய்து அதுவே எமது குறிக்கோளை அடைவதற்கான வழியென அனைத்து மக்களையும் அதனை ஏற்கும் படி பலாத்கார திணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறோம்.

சமாதானம் வரவேண்டுமெனில் முன்வைக்கப்படும் தீர்வு நியாயமான தீர்வு என்ற உணர்வு அனைத்து தரப்பினருக்கும் வரவேண்டும். அதனை யதார்த்தமாக்கும் வகையில் எமது பேச்சுக்கள், செயல்முறைகள் அனைத்தும் அமைய வேண்டும். அனைத்தையும் வன்முறைகள் மூலமே சாதிக்கலாம் என்று செயல்பட்டால், மனித அழிவை மட்டுமே நாம் நேசித்தவர்களாவோம்.

ஆயுத வலிமையால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பி செயல்படுவது ஆயுத போட்டியினை வளர்த்து அதிகமான அழிவினையே ஏற்படுத்தும். ஆயுதங்களின் ஆதிக்கம் மனித நேயங்களை புறக்கணித்து, யதார்த்த நிலமைகளால் குறிக்கோளை மறந்து, தனிமனித உணர்வுகளின் கொந்தளிப்புகளுக்கு விடுதலை தேடும் விபரீத வேட்டை விளையாட்டாக போராட்ட வடிவங்களை மாற்றும்.

பொதுவாகவே நீ அவனுடைய நிலையில் இருந்து பார்த்தால் தான் உனக்குத் தெரியும் என்று கூறுவார்கள். (You put yourself in their shoes) . தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான உரிமையுள்ள தீர்வை முன்வைக்க விரும்பும் சிங்கள அரசியல் சக்திகளின் நிலையிலிருந்து யோசித்தால், எமது செய்கைகளின் மூலம் நாம் அவர்கள் செயலை இலகுவாக்கிறோமா என்று புரியும். வேலியே பயிரை மேயும் கதை எமக்கும் பொருந்தும் என்பதை புரிந்து கொள்வோம்.

எமது போராட்டம், இலங்கையில் காணப்பட்ட ஜனநாயக அரசியல் முறையில் இருக்கும் குறைகளை நீக்கி, அக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டுமே அல்லாமல். ஏற்கனவே காணப்பட்ட ஜனநாயக உரிமைகளையும் நீக்கி மன்னர் ஆட்சியையோ சர்வாதிகாரத் தன்மை கொண்ட அல்லது அராஜகத் தன்மை கொண்ட ஆட்சியையோ நிறுவுவதற்கு உதவுவதாக இருக்கக் கூடாது. எமது போராட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவது என்ற குறிக்கோள் மனதிலிருக்குமானால் சரியான வழிமுறைகள் இலகுவில் விளங்கும்.

தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழம் மட்டுமே என்பதே உங்கள் சிந்தனைக்கு சரியாக இருப்பினும், அதை அடைவதற்கான அணுகுமுறைகள் குறித்து தவறுகளை சுட்டிக்காட்டுவதும், சுதந்திரமான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறுவதும் அவசியமாகாதா? தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தடியெடுத்தவன் எல்லாம் தலைவனாகலாம் என்றிருக்கையில் அந்த வழியில் போனால் சரியான பாதையால் போக முடியுமா?

இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் உரிமைப் போராட்டங்கள் குறைந்த பட்சம் மூன்று கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்:

1. உரிமைக்கு போராடும் சமூகத்தின் அர்ப்பணிப்பு

2. அப்போராட்டத்தின் உள்ளடக்கத்தினதும், வழிமுறைகளினதும் நியாயமுள்ள
தன்மை

3. நியாயமாக முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செவிமடுக்கும் நேர்மை

இதில் முதலாவது அம்சத்தில், இதுவரை கால எமது மக்களின் இழப்புகள், அழிவுகள், தியாகங்கள், துரோகங்கள் யாவும் தேவைக்கும் மிக அதிகமாகவே சமூகத்தின் உரிமைக்காக போராடும் எமது அர்ப்பணிப்பை உலகிற்கு காட்டியள்ளன. இனிமேலும் அவற்றிற்கு எந்தவித தேவையுமில்லை.

மற்றைய இரண்டு அம்சங்களிலும் எமது பங்களிப்பு உலக அரங்கில் மிக மோசமாக கணிக்கப்படுவது தெட்டத்தெளிவு. இவற்றில் கணிசமான மாற்றங்கள் வரும் வரையில் எமது நிலையில் முன்னேற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் இன்று புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கிறது. உங்களின் நல்வாக்கும் நற்செய்கையும் நன்மை விளைவிக்கும் என்று உறுதியுடன் நம்பலாம். நீங்கள் மனதில் எதை நினைத்து செயல்பட்டாலும் எவரும் தாயகத்தில் தமிழ் மக்கள் வாழ்வு நாசமாக்கப்பட வேண்டும் என்று நிச்சயம் விரும்ப மாட்டீர்கள்.

தனி மனிதனின் உரிமையை மதிப்பது இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு பங்கம் விளைவிக்க முடியாது என்பதை நீங்கள் உணரவேண்டும். மாறாக மனிதனின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மதிக்கும் இனமாக நாம் பெருமையடன் மிளிர முடியும்.

இலங்கையில் சமாதானமும் நியாயமான ஓர் அரசியல் தீர்வும் போருக்கு முடிவும் வர உங்களாலும் நிட்சயம் உதவ முடியும். அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை கொண்டுவர முயலும் அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையில் உங்கள் பேச்சுக்கள் செயல்களை அமைத்து உங்கள் பங்களிப்பை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதன் மூலமே உங்கள் கருத்துக்களும் மதிப்புடன் செவிமடுக்கப்படும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

எமது மக்களின் விடுதலைக்கான போராட்டம் எமது நாட்டு மக்கள் அனைவரதும் உயிருக்கும், உரிமைக்கும் உத்தரவாதம் வழங்குவதாக அமைய வேண்டும். இதன் மூலமே, பேரினவாத அரசியல் சக்திகளின் அழிவுகளை நாம் உலகஅரங்கில் அம்பலப்படுத்த முடியும். சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நியாயமான அளவு பெற முடியும். எமது மக்களின் அழிவுகளைப் பெருக்கி, அயலவர்களாக வாழ வேண்டிய சகோதர இனங்களின் உறவுகளைக் கெடுத்து, சொல்லொணாத் துயரங்களை எமது சொந்த மக்கள் மேல் சுமத்தி, எந்தவொரு உயிருக்கும் உத்தரவாதமில்லாததொரு நிலையைத் தோற்றுவித்ததைத்தவிர எமது மக்களின் விடுதலைக்கான போராட்டம் இதுவரை சாதித்ததென்ன என ஒரு முறை சிந்தித்துப்பாருங்கள். இந்த நிலை இன்னும் எத்தனை வருடங்கள் தொடரும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?

தமிழ் மக்கள் மனித உரிமைகளை மதிப்பதன் மூலமே இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த முடியும். இன்னொருவருடைய கருத்தைக் கவனத்தில் கொள்வதன் மூலம் நாங்கள் ஒன்றையும் இழக்கப் போவதில்லை. இனப்பிரச்சினை மேலும் மேலும் சிக்கலாக நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. சமாதானம் மூலமான தீர்வொன்றே எங்களுடைய தெரிவு எனின், எங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் சமாதானம் மூலமான தீர்வொன்றை தூண்டுவதாக அமைய வேண்டும். அதற்கு, உங்களுடைய ஆதரவில் எந்த வொரு உயிரும் இனிமேல் இழக்கப்படக் கூடாது என்பதையே அகரமாக கொள்ளவேண்டும்.

மனித நேயம் சார்ந்த வழிமுறைகளை வலுப்படுத்தி இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க புலம்பெயர்ந்த உங்களால் இன்னும் காத்திரமாக பங்காற்ற முடியும்.

விடுதலைப் போராட்டம் பற்றிய உங்கள் கருத்துக்கள் விசாலமடையும் போது தமிழ் மக்கள் நிச்சயமாக பெருமைப்பட முடியும்.


தமிழ் சமாதான ஒன்றியம்

28/01/2008
Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom
tamilforumforpeace@gmail.com