Wednesday 31 October 2007

இலங்கையில் சமாதானமும் சமாதானத்திற்கான அடிப்படைகளும்



பொதுக் கூட்டம்

ரொறன்டோ, கனடா
நவம்பர் 10, சனிக்கிழமை

இடம்: Scarborough Civic Centre (McCowan & Ellesemere) 150 Borough Drive , Toronto


இலங்கையில் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத விடயமாக தேசிய இனங்களின் பிரச்சனை இருந்து வருகின்றது. இது தீர்க்கப்படாத காரணத்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடுகின்றது. தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்படும் வரை இன் நிலைமை தொடரும் என்பது சந்தேகமில்லை.

இன்நிலையில் இலங்கையில் தேசிய இனங்களின் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்ற நோக்கில் ' சமாதானத்திற்கான கனேடியர்கள்' (Canadians for Peace) என்ற மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வித அரசியல் கட்சிகளின் சார்பும் இன்றி, கனடாவாழ் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு இலங்கையில் வாழும் தமிழர், முஸ்லீம், மலையக மக்களுக்கு நீதியான, கௌரவமான, நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி கனடாவில் செயல்படத் தீர்மானித்துள்ளது.

இவ்வமைப்பின் முதலாவது பொதுக் கூட்டம் நவம்பர் 10, 2007 � மாலை 3.00 மணிக்கு ரொறன்டோ கனடாவில் நடைபெறவுள்ளது.

இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர்களாக ஜேர்மனியில் சமாதானத்திற்காக இயங்கும் பரா குமாரசாமி அவர்களும், இலண்டனில் சமாதானத்திற்காக இயங்கும் உபாலி கூரே அவர்களும் கலந்து கொள்கின்றனர். கனடாவில் இருந்து பங்கு கொள்ளும் பேச்சாளர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகின்ற அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

'சமாதானத்திற்கான கனேடியர்கள்' அமைப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக செயல்படும். இதற்கான இவ்வமைப்பு பல திட்டங்களை வகுத்துள்ளது.


தொடர்புகளுக்கு: canadiansforpeace@gmail.com

செழியன்: chelian@rogers.com/416-792 2188
ரஞ்சித்: rsbandulahewa@gmail.com/416-621 0824

Thursday 11 October 2007

தமிழ் சமாதான ஒன்றியத்தின் கலந்துரையாடலில் கவனங்கொள்ளப்பட்ட கருத்துக்கள் பற்றிய ஒரு பத்திரிகைக் குறிப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் இலங்கை இனப்பிரச்சினையை ‘மூன்று கட்டங்கள்’ ஊடாக தீர்வு செய்யும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, தமிழ் சமாதான ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை 6 மாலை, லண்டனில் நடைபெற்றிருந்தது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், இலங்கை அமைச்சருமான திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதற்கு முந்திய வாரம் லண்டன் கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடைபெற்றிருந்த கருத்தரங்கொன்றில் ‘மூன்று கட்டங்கள்’ ஊடாக இலங்கை இனப்பிரச்சனையை தீர்வு செய்வும் தனது கட்சியின் திட்டங்களை முன்மொழிந்திருந்ததைத் தொடர்ந்தே இக் கருத்தரங்கு ஏற்பாடாகியிருந்தது. லண்டனிலுள்ள பல்வேறு அரசியல் ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்த இக் கலந்துரையாடலில் கவனங்கொள்ளப்பட்ட கருத்துக்கள் பற்றிய ஒரு பத்திரிகைக் குறிப்பு இது.

பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இலங்கை இனப் பிரச்சனைக்கான சர்வகட்சி பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் தமது பரிந்துரைகளை பகிரங்கப்படுத்துவதை தொடர்ந்து பிற்போட்டுவரும் பரிதாப சூழ்நிலையையும், இந்தப் பிரேரணைகள் பகிரங்கமான பின்னரும் பாராளுமன்ற வாக்கெடுப்பு போன்ற பல படிநிலைகள் ஊடாக வந்து பயனுள்ள ஒரு தீர்வுத்திட்டமாக வருவதில் எதிர் நோக்கவுள்ள ‘பற்பல’ பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு, தினமும் தொடரும் தமிழ் உயிர் இழப்புகளை இயலுமானவரை தடுக்கவும், தமிழ் மக்கள் தமது தினசரி கடமைகளை தடங்கலின்றி தொடர்ந்து - உணவு - இருப்பிடம் - மற்றும் உயிர் வாழ்வதற்கான நிலைமைகளை - தற்காலிகமாகவேனும் தங்கவைத்துக்கொள்ளவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் ‘மூன்று கட்ட’ தீர்வுத் திட்டம் முயலுமா என்பதை இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தவர்கள் கவனங் கொண்டிருந்தனர். இம் ‘மூன்று கட்ட’ தீர்வுத் திட்டம், இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் அனைத்தும் ‘இழுபறிப்பட்டு’வரும் நிலைமைபற்றி கவலைகொண்டிருந்த பலரின் கவனத்தைக் கவர்ந்;திருந்ததில் வியப்பேதுமில்லை.

புலம்பெயர் தமிழருள் பெருமளவினரின் அனுசரணையுடன் தவறான முறையில் தொடரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ விடுதலைப்போராட்டமானது முழுத் தமிழ் மக்களையும் எந்தவொரு தீர்வுக்கும் இணங்கிப் போகச் செய்யும் இக்கட்டானதொரு நிலைமைக்குத் தள்ளிவந்துள்ளதொரு துர்ப்பாக்கிய தருணத்தில், புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் தேசபக்த சக்திகள் மிக அதிகமான அதிகார பரவலை அளிக்கக்கூடியதொரு தீர்வுத்திட்டமொன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தர முயலவேண்டும் என்ற கருத்து இக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த பலரிடம் காணப்பட்டிருந்தது. இதனுடன், இம் ‘மூன்று கட்ட’ தீர்விலிருந்த அம்சங்கள் பலவற்றை முழுமையாக ஆதரித்திருந்தவர்கள் கூட, இதனை அமுல் படுத்துவதில் இலங்கையிலுள்ள இதர தமிழ் ஜனநாயக அரசியல் சக்திகள் அனைத்தினதும் பங்குபற்றுதல் முழுவதாகப் பெறப்படவேண்டும் என அறிவித்திருந்ததுடன், இதற்கான முயற்சிகள் எவையும் முன்னெடுக்கப்;படாமைக்கு தமது ஆழ்ந்த மனவருத்தத்தையும் தெரிவித்திருந்தனர்.

இக் கலந்துரையாடலில், இந்த ‘மூன்று கட்ட’ தீர்வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியதற்கான காரணங்களாக, பின்வரும் இரண்டு கருத்துக்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தன:

முதலாவது, இந்த ‘மூன்று கட்ட’ தீர்வு திட்டம் முற்றுமுழுதானதொரு தீர்வுத் திட்டமாக இல்லாதிருப்பினும்கூட, இலங்கை அரசியல் சூழ்நிலையில் நடைமுறைச் சாத்தியமானதொன்றாக அமைந்துள்ளது. ஏற்கனவே இலங்கை அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள வட கிழக்கு மாகாண சபைகளை தனித்தனியாகவேனும் இயங்கவைப்பதன்மூலம் இத் தீர்வுத் திட்டத்தின் முதல் கட்டம்; அமுல்படுத்தப்பட இருப்பதனால், இலங்கை அரசு, எதிர் கட்சிகள் மற்றும் இந்திய அரசு எதனதும் எதிர்ப்பின்றி உடனடியாகவே இது நடைமுறைக்குவந்து வட-கிழக்கிலுள்ள எமது மக்களின் பல அன்றாட அடிப்படை பிரச்சினைகளின் தீர்வுக்கு வழிசமைக்க ஏதுவாக இருக்கும்.

இரண்டாவது, இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஏற்படுத்தப்பட்ட சர்வகட்சி பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு தமது பிரேரணைகளை முன்மொழிவதிலேயே பல பின்னடைவுகளை எதிர்கொண்டு வருவதாலும், இந்தப் பிரேரணைகள் ஈற்றில் வெளிவந்தும் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற வாக்கெடுப்புடன் இறுதித்தீர்வாக வெளிவருவதில் எந்தவித உத்தரவாதமுமில்லாததொரு நிலையே தெரிவதாலும், இந்த இரண்டும் ‘இடைஞ்சலின்றி’ நடந்து முடிய எடுக்கும் இடைக்காலத்தில் எந்தவித ஏற்பாடுகளுமின்றி தொடரும் எமது மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்க, இந்த ‘மூன்று கட்ட’ தீர்வு திட்டம் ஒரு இடைக்கால ஏற்பாடாக இருக்கும்.

எனினும் இந்த ‘மூன்று கட்ட’ தீர்வு முயற்சியை தற்போது முழுவதாக ஆதரிப்பதிலுள்ள ஆபத்துகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தவர்களின் கவனத்திற்குத் தப்பியிருக்கவில்லை.

முதலாவதாக, இந்த ‘மூன்று கட்ட’ தீர்வுத் திட்டம் முன்கொண்டுவரப்படுமானால் இது சர்வகட்சி பாராளுமன்ற தெரிவுக்குழு முன்மொழிய முனைந்துவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதியை நிரந்தரமாகவே பின்தள்ளிவிடும் அபாயம்பற்றி அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, இலங்கை இனப் பிரச்சனைக்கு சர்வகட்சி பாராளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரைசெய்யவுள்ள ஏற்பாடுகள் அதிகளவு அதிகார பரவலாக்கத்திற்கு ஆதரவாகவுள்ள காரணத்தால், சர்வதேச அரசுகளின் ஆதரவுடன் இலங்கை அரசுக்கு மேலும் அழுத்தத்தையளித்து சர்வகட்சி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை பகிரங்கமாக்கி, அவற்றை பாராளுமன்ற வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வைகாணும் முயற்சிகள் அனைத்தும் முடக்கப்படும் என கருதப்பட்டது.

குறிப்பாக இந்த ‘மூன்று கட்டம்’ மூலமான தீர்வு முயற்சியானது அதனது மூன்றாவது கட்டத்தில், இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட்;டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை மட்டுமே எமது மக்களுக்குப் பெற்றுத்தரும் என்பதால், இந்த ஏற்பாடு இனப் பிரச்சினைக்கான ஒரு இறுதித் தீர்வுக்கு இட்டுச்செல்லுமா என ஜயுறவு தெரிவிக்கப்பட்டது. மேற்படி 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களி;ன் ‘பற்றாக் குறை’ இனப் பிரச்சினைக்கு ஒரு இறுதித்தீர்வை அடைய உதவாது என மறைந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் வட-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றியும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

பொதுவாக, சர்வகட்சி பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினரின் முயற்சிகள் முழுவதாக முடிவுக்குவரும்வரை, ‘மூன்று கட்ட’ தீர்வுதிட்ட முயற்சிகளை முன்தள்ளுவதை தவிர்க்கவேண்டுமென்பதே பரவலான ஆதரவைப் பெற்றிருந்தது.

- 10 ஒக்டோபர், 2007
tamilforumforpeace@googlemail.com

Thursday 4 October 2007

பர்மாவிக்கான சர்வதேச நடவடிக்கை நாள்

2007 அக்டோபர் 6, சனிக்கிழமை காலை 11 மணிக்கு, பர்மிய மக்களின் ஜனநாயக சிவில் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கும் மாபெரும் பேரணி லண்டன் பிம்லிகோவில் நிகழவிருக்கிறது. சர்வ தேச மன்னிப்பு சபை உட்பட பல் வேறு மனித உரிமை அமைப்புகள், தொழில் சங்கங்கள் கலந்து கொள்ளும் இவ்வூர்வலத்தில் தமிழ் சமாதான ஒன்றியமும் கலந்து கொள்வது இக்கால கட்டத்தில் அவசியமாகிறது.

கடந்த பல சகாப்தங்களாக ராணுவ கொடுங்கோன்மையை அனுபவித்து வரும் பர்மிய மக்களின் சாத்வீக ரீதியான ஜனநாயக எழுச்சிக்கு தார்மீக ஆதரவை நாம் வழங்குவோம். சிறார்களை ராணுவத்தில் சேர்ப்பதிலிருந்து பர்மாவையே ஒரு பெரும் சிறை கூடமாக மாற்றி விட்டது பர்மிய ராணுவ அரசு. மாற்று கருத்துகள் கொண்டவர்கள் கொலைக்கும் சித்திரவதைக்கும் ஆளாகின்றனர். எண்ணை வளமும் கனிவளமும் கொண்ட பர்மாவின் அனைத்து வளங்களும் ராணுவத்தால் அபகரிக்கப்பட்டு மக்கள் பட்டினிக்கு ஆளாக்கப்படுகின்றனர். பொறுமையின் சிகரமாக கருதப்படும் பவுத்த துறவிகள் வீதிக்கு இறங்கியதை பொறுக்க முடியாத இராணுவ ஜுந்தா தனது மிலேச்ச தனத்தை மக்கள் மீதும் துறவிகள் மீதும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

பர்மாவின் ஜனநாயகக் குரலான ஒங் சான் சூ சீ கடந்த 12 வருடங்களாக சிறையிலும் வீட்டுக் காவலிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். மஹாத்மா காந்தி, மார்டின் லுதர் கிங், நெல்சன் மண்டேலா வரிசையில், அரசியல் ஜனநாயக சிவில் உரிமைகளை சாத்வீகமாக போராட்டங்களால் வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையை பர்மா எங்களுக்கு வலியுறுத்துகிறது.

ஆயுத வன்முறை போராட்டங்கள் பேரழிவையும், துப்பாக்கிகள் அதிகாரத்தையும் சர்வாதிகாரத்தையும் தோற்றியதுதான் சமீப கால வரலாறுகள். அழிவுகளையும் அவலத்தையும் மட்டுப்படுத்தி ஜனநாயக சூழலை கொண்டுவருவதற்கு ஒரேவழி சாத்வீக ரீதியான போராட்டமே. பர்மிய மக்களின் வீரம்செறிந்த வன்முறை அற்ற போராட்டம் இன்று எம்முன் உள்ள சிறந்த முன்னுதாரணம். ஆகவே, தமிழ் சமாதான ஒன்றியம் தனது தார்மீக ஆதரவை வழங்கும் வகையில் இம்மாபெரும் ஊர்வலத்தில் நாம் அனைவரும் கலந்து கொள்வோம்.


Global Day Of Action for Burma.
Peaceful March through London
Date: Saturday, 6 October 2007
Time: 11:00 am
Venue: Assemble at Tate Britain at 11.00am, nearest tube Pimlico
Events:
March at 11:30 to Westminster Bridge
Prayers led by Venerable U Uttara at the Westminster Bridge and throwing flowers to the river as a tribute to those who passed away due to recent atrocities in Burma
March towards Downing Street
March towards Trafalgar Square and be given speech by MPs and peace-loving leaders
__________________________________________
Burmese Democratic Movement Association - UK BDMA-UK,
110 B, Rectory Road, Stoke Newington, London N16 7SD
[Tel: 02072757413] [Email: bdma@bdmauk.org ]
[Web - http://www.bdmauk.org]