2007 அக்டோபர் 6, சனிக்கிழமை காலை 11 மணிக்கு, பர்மிய மக்களின் ஜனநாயக சிவில் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கும் மாபெரும் பேரணி லண்டன் பிம்லிகோவில் நிகழவிருக்கிறது. சர்வ தேச மன்னிப்பு சபை உட்பட பல் வேறு மனித உரிமை அமைப்புகள், தொழில் சங்கங்கள் கலந்து கொள்ளும் இவ்வூர்வலத்தில் தமிழ் சமாதான ஒன்றியமும் கலந்து கொள்வது இக்கால கட்டத்தில் அவசியமாகிறது.
கடந்த பல சகாப்தங்களாக ராணுவ கொடுங்கோன்மையை அனுபவித்து வரும் பர்மிய மக்களின் சாத்வீக ரீதியான ஜனநாயக எழுச்சிக்கு தார்மீக ஆதரவை நாம் வழங்குவோம். சிறார்களை ராணுவத்தில் சேர்ப்பதிலிருந்து பர்மாவையே ஒரு பெரும் சிறை கூடமாக மாற்றி விட்டது பர்மிய ராணுவ அரசு. மாற்று கருத்துகள் கொண்டவர்கள் கொலைக்கும் சித்திரவதைக்கும் ஆளாகின்றனர். எண்ணை வளமும் கனிவளமும் கொண்ட பர்மாவின் அனைத்து வளங்களும் ராணுவத்தால் அபகரிக்கப்பட்டு மக்கள் பட்டினிக்கு ஆளாக்கப்படுகின்றனர். பொறுமையின் சிகரமாக கருதப்படும் பவுத்த துறவிகள் வீதிக்கு இறங்கியதை பொறுக்க முடியாத இராணுவ ஜுந்தா தனது மிலேச்ச தனத்தை மக்கள் மீதும் துறவிகள் மீதும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
பர்மாவின் ஜனநாயகக் குரலான ஒங் சான் சூ சீ கடந்த 12 வருடங்களாக சிறையிலும் வீட்டுக் காவலிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். மஹாத்மா காந்தி, மார்டின் லுதர் கிங், நெல்சன் மண்டேலா வரிசையில், அரசியல் ஜனநாயக சிவில் உரிமைகளை சாத்வீகமாக போராட்டங்களால் வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையை பர்மா எங்களுக்கு வலியுறுத்துகிறது.
ஆயுத வன்முறை போராட்டங்கள் பேரழிவையும், துப்பாக்கிகள் அதிகாரத்தையும் சர்வாதிகாரத்தையும் தோற்றியதுதான் சமீப கால வரலாறுகள். அழிவுகளையும் அவலத்தையும் மட்டுப்படுத்தி ஜனநாயக சூழலை கொண்டுவருவதற்கு ஒரேவழி சாத்வீக ரீதியான போராட்டமே. பர்மிய மக்களின் வீரம்செறிந்த வன்முறை அற்ற போராட்டம் இன்று எம்முன் உள்ள சிறந்த முன்னுதாரணம். ஆகவே, தமிழ் சமாதான ஒன்றியம் தனது தார்மீக ஆதரவை வழங்கும் வகையில் இம்மாபெரும் ஊர்வலத்தில் நாம் அனைவரும் கலந்து கொள்வோம்.
Peaceful March through London
Time: 11:00 am
Venue: Assemble at Tate Britain at 11.00am, nearest tube Pimlico
March at 11:30 to Westminster Bridge
Prayers led by Venerable U Uttara at the Westminster Bridge and throwing flowers to the river as a tribute to those who passed away due to recent atrocities in Burma