தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சு வார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு உடன்படுவார்களேயானால், இலங்கை அரசின் தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உடன் நிறுத்தப்படும் என இலங்கை அரசின் பாதுகாப்பு செயலரின் இன்றைய பத்திரிகை அறிவிப்பை தமிழ் சமாதான ஒன்றியம் வரவேற்பதோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இக் கோரிக்கையை உடன் ஏற்று சமாதான பேச்சு வார்த்தைகளை மீளத் தொடங்க வேண்டும் என பகிரங்கமாக கோருகிறது. சர்வதேச அபிப்பிராயத்தை தற்காலிகமாகச் ‘சமாளிக்கும்’ ஒரு முயற்சியாகவே இலங்கை அரசு இந்த பேச்சுவார்த்தை அழைப்பினை விடுத்திருந்தாலும்கூட, தமிழ் மக்களின் அழிவுகளை தடுத்து நிறுத்தும்பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப இணங்கவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் கருதுகிறது.
ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு மேலாக தீவிரமடைந்துவரும் தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் ஜயாயிரத்துக்கும் அதிகமான உயிர் இழப்புகளை விளைவாக்கியுள்ளதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த நாட்டிலேயே உணவு, உடை, இருப்பிட வசதியின்றி அகதிகளாகுவதற்கும் வழிவகுத்து, பிரதானமாக வட-கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரதும் உயர்வாழும் உரிமையையே கேள்விக்குறியாக்கி வரும் நிலைமைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கவனத்தில் கொள்ளுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது. இலங்கை மக்கள் அனைவரதும் சுபிட்சமான எதிர்காலத்தில் பொதுவாகவும், தமிழ் மக்கள்மீது குறிப்பாகவும் அக்கறையுள்ள எவரும் இந்நிலைமைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது. இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தம் பெயரளவிலேனும் தற்போதும் நடைமுறையில் உள்ளதென்பதை சர்வதேச அழுத்தம் காரணமாக இருசாராரும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு நிலையில், தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்தவித தடையும் இருக்கமுடியாதென்பதை தமிழ் சமாதான ஒன்றியம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இலங்கையிலும் புலம்பெயர்நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களின் நலன் விரும்பிகளும், ஸ்தாபனங்களும், பத்திரிகைகளும், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களும், இலங்கை அரசின் இக் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு தமிழீழ விடுதலைப் புலிகளை வற்புறுத்தவருமாறும் தமிழ் சமாதான ஒன்றியம் பகிரங்கமாக கோருகிறது.
Tamil Forum for Peace (TFP)
tamilforumforpeace@googlemail.com
Sunday, 23 September 2007
Press Release - 23, September 2007 : TFP
பத்திரிகை அறிக்கை - 23, செப்டம்பர் 2007
Posted by Admin at 00:14