Wednesday, 9 January 2008

சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வும் இடைக்கால நிர்வாக அமைப்பும்

இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் பற்றி பல்வேறு மட்டங்களிலும் நடைபெறும் கருத்துப் பரிமாறல்கள் விரைவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றினை சாத்தியமாக்கும் என்பது சரியானதே. அதனை நடைமுறைப்படுத்த தேவையான சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அவை அரசியல் யாப்புகளில் சேர்க்கப்படும்வரை இதற்கு வழி கோலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முயற்சிகள் வெற்றியளிக்க எம்மாலான அனைத்து உதவிகளும் ஊக்குவிப்புகளும் செய்யப்பட வேண்டும். இம்முயற்சிகளில் நம்பிக்கை வைத்து நமது பங்களிப்புகளை ஒருமுகப்படுத்தி வலுச் சேர்ப்பது இன்றியமையாதது. இதற்கான முயற்சிகளில் தமிழ் சமாதான ஒன்றியமும் அயராது செயல்பட்டுவரும். சர்வ கட்சி பிரதிசிதிகள் குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என்பதிலும், அதுவும் கூடிய விரைவிலேயே சாத்தியமாக வேண்டும் என்பதிலும் அனைவரும்; உறுதியுடன் உழைக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அதே நேரத்தில் இதன் மூலம் பெறப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமங்களைத் தாண்டிச் செல்லவும், அப்போது ஏற்படக் கூடிய நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளிக்கவும் தேவையான கால அவகாசம் குறித்து நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது. இனப்பிரச்சனைக்கான தீர்வினையும், அத்தீர்வை எட்டுவதற்கான காலக்கெடுவினையும் கவனத்தில் கொள்ளும்போது நாம் கரிசனை கொள்ள வேண்டிய சில விடயங்கனை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

1. கடந்த முப்பது வருட கால யுத்தம் எமது மக்களின் வாழ்வின் மீது சுமத்தியுள்ள சுமைகள் ஓரளவுக்கேனும் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேணடிய தேவை

2. நீண்ட காலமாக எமது மக்களின் அன்றாட வாழ்வில் இலங்கை இராணுவம் ஆதிக்கம் செலுத்துவதை நீக்கும் வழிகளைப் புரிதல்

3. தமிழ்பேசும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் பிரதிநிதிகளுக்கு அதிகாரம்

4. சர்வதேச அரங்கில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரமுள்ள பிரதிநிதிகளின் அவசியம்

மேற் கூறிய காரணங்களும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பொதியினை பெரும்பான்மை சமூகம் அங்கீகரித்து பின்னர் அரசியல் யாப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை நடைமுறைபடுத்த தேவைப்படும் காலத்தைப் பற்றிய சரியான கணிப்பும், அரசியல் நிர்வாக அலகொன்று காலதாமதமின்றி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுபற்றி தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் தலைவர்கள் அக்கறையற்று இருக்க முடியாது என்பதினை தெளிவாக உணர்த்தும்.

மாறிவரும் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு தமது வலிமையினை பலப்படுத்திக் கொள்வதில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலமே ஜனநாயக அரசியல் வழிமுறைகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஆளுமை பெறும்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அமுலாக்கப்பட்ட 13வது அரசியல் திருத்த சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்த மாகாண சபைகள் ஏனைய மாகாணங்களில் மட்டும் இயங்குவதற்கும், அவை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயங்க விடாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கும் பெரும்பான்மை இனவாத அரசியலின் சூழ்ச்சியே முக்கிய காரணியாகும். மாகாண சபை நிர்வாகத்தினால் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய உரிமைகளை தடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதினால் தமிழ் பேசும் மக்கள் அடைந்த இழப்புகள் அநேகம். தமிழ் பேசும் மக்கள் வாழ்வு சீர்குலைக்கப்பட்டு சின்னாபின்னமாவதற்கு வடக்கு-கிழக்கு மாகாணசபை இயங்கவிடாமல் தடுக்கப்பட்டதே பிரதான காரணமாகும். மாகாண சபை தொடர்ச்சியாக இயங்கிவந்திருக்குமெனில் இன்று எமது இனம் தன்னுடைய பல உரிமைகளை இலகுவாக பெற்றிருக்க முடியும். நிட்சயமாக பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும.; விடுதலைப் புலிகளின் தவறான அரசியல் கணிப்புகள் பேரினவாத இனவாத அரசியல்வாதிகளின் அபிலாசைகளுக்கே ஆதரவாகிப் போயிற்று.

தற்போது அதே தவறை ஜனநாயக அரசியல் தலைவர்களினது அரசியல் கணிப்புகள் செய்து விடக்கூடாது என நாம் விரும்புகிறோம். அவர்கள் தமிழ் பேசும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக தம்மால் இயன்ற அனைத்தினையும் செய்ய பின்நிற்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

தமிழ் பேசும் மக்களின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சரியான அரசியல் அணுகுமுறை பற்றிய தெளிவினை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துக்களுக்கும் மதிப்பளித்து நடைபெறும் கலந்துரையாடல்கள் மூலமே நாம் தவறிழைப்பது தவிர்க்கப்பட முடியும். நாம் ஒருவரோடு ஒருவர் கதைக்க முடியாத அளவிற்கு இறுகிப் போனவர்களாக இருப்பின் தமிழ் பேசும் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் பலமிழந்தவர்களாகவே இருப்போம். தமிழ் பேசும் மக்களை அழிவில் இருந்து மீட்பதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய நாம் பின்னிற்க கூடாது என்பதை நினைவு கூர்ந்தும், அமைதியை ஏற்படுத்தும் எந்த தருணத்தையும் தவற விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டும் செயல்படுமாறு தேசிய இன உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் தமிழ் பேசும் சமூகம் பெற்றிட உழைக்கும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் வேண்டுகின்றோம்.

மேலும், தொடரும் சர்வ கட்சி பிரதிசிதிகள் குழு முயற்சிகளுக்கு பல்வேறு வகையிலும் உந்துதலை வழங்க வேண்டியதன் அவசியத்தை புறக்கணிக்கக் கூடாது என்பதனை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறோம். பெரும்பான்மையின பிரதிநிதிகளிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்தவும், சிறுபான்மையினங்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தவும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு கூட்டங்கள் பாரிய அளவில் பயனுடையதாக இருக்க முடியும். அதன் மூலம் மட்டுமே அரசியல் சட்ட மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதில் ஜயமில்லை. சிலர் இதனை சர்வதேச உலகத்திற்க்கு மகிந்த அரசு செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டு என்று கருதினாலும் அதனை பயனளிக்கும் செயல்முறையாக்குவது தமிழ் அரசியல் தலைமைகளின் சாதுரியமாகும்.

சர்வகட்சி பிரதிநிதிகளின் குழு முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் வரையிலான கால இடைவெளிக்குள் அதனை மேலும் விரைபு படுத்தக் கூடிய வகையில் இடைக்கால நிர்வாக அமைப்பொன்றினை ஏற்படுத்துவது தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். அதில் ஜனநாயக அரசியல் சக்திகள் பங்கெடுப்பது வடக்கு கிழக்கு மாகாண சபை அமைப்புகள் எந்த வகையிலும் சிங்கள மக்களின் நலனுக்கு பாதகமாக அமையாது என்பதினை குறிப்பாக அப்பகுதிகளில் வாழும் முஸ்லீம் சிங்கள மக்களுக்கு உணர்த்தி அவர்களின் ஆதரவை வென்றெடுக்க உதவும். முஸ்லிம் இன மக்களுடனான உறவுகளை சீர்படுத்தி வலிமைப்படுத்த முடியும்.

இடைக்கால நிர்வாக சபையினால் ஏற்படக் கூடிய நன்மைகள் என்ன?

1. அதன் மூலம் பெறக்கூடிய அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வின் தரத்தை உயர்த்த முடியும்

2. சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அவர்கள் தேவைகளைச் சொல்லவும், உதவிகளைக் கோரவும் முடியும்

3. இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்

4. தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகளை வலுப்படுத்த முடியும.

5. ஊடகங்களுடன் உறவுகள் மேம்படுத்தப்பட முடியும். அவற்றின் பயனுள்ள தன்மையை பன்மடங்கு பயன்படுடத்த முடியும்

6. உள்வீட்டுத் தகவல்களை உடனுக்குடன் அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்

7. அந்திய மத்திய அரசுடனும் தமிழ் மாநில அரசுடனும் உத்தியோக உறவுகளை வளர்க்க முடியும்

8. மூலவளம், நிதி, மூலதனம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், சூழல், பாதுகாப்பு என்பவற்றின் மீதான செல்வாக்கினை மக்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்

9. தமிழ் சிங்கள சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் பரஸ்பர நட்பையும் வளர்த்து நிரந்தர அமைதியையும் சமாதானத்தையும் நோக்கி நகர முடியும்

10. சிங்கள தமிழ் இனவாத கூச்சல்களின் பொய்யுரைகளை பலவீனப்படுத்தி அதிகாரப் பகிர்வின் மூலம் அனைத்து சமூகங்களும் நன்மையடைவதை யதார்தமாக நிரூபித்துக் காட்டும் வாய்ப்பினை பயனுள்ள முறையில் பயன்படுத்த முடியும்.

11. சீரழிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வின் புணர்நிர்மானச் செயல்களை உடனடியாக அமுல்படுத்தி அதில் எமது பங்கினை வழங்க முடியும்

12. தமிழ் பேசும் மக்கள் இராணுவ, போராளிக் குழுக்களினால் துன்புறுத்தப்படுவதை தவிர்க்க முடியும்

13. ஆயதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதன் தாக்கங்களிலிருந்து விடுபட்டு மீண்டும் தமது வாழ்வினைத் தொடர ஆவன செய்ய முடியும.

14. திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்புடையனவாக இருக்கச் செய்ய முடியும்

15. அதிகாரப் பரவலாக்கலில் உள்ள தேவைகளை நடைமுறையின் மூலம் இலகுவில் புரிய வைக்க முடியும்

16. இலங்கை இராணுவம் தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளைக் கண்காணித்து அவற்றினைத் தவிர்க்க முடியும்

மேற்கூறிய அனைத்து விடயங்களிலும் முழுமையான செல்வாக்கினை வகிக்க முடியாவிட்டாலும் எமது முயற்சியினைப் பொறுத்து கணிசமான ஆளுமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் முடிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்க முடியும்.

இழுபறிப்பட்டுவரும் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபாரிசுகள் அங்கீகாரம் பெற்று நடைமுறைக்கு வரும் வரையில், உடனடியாக ஏற்படுத்தப் படக்கூடிய அதிகபட்ச அதிகாரமுள்ள இடைக்கால அரசியல் அமைப்பினை காலதாமதமின்றி ஸ்தாபிப்பது காலத்தின் தேவையாகியுள்ளது.

தெளிவும் உறுதியும் இருக்கும் பட்சத்தில் இடைக்கால நிர்வாக அமைப்பினை சரிவர நிறுவ முயல்வதும், அதனை திறமையாக அமுல்படுத்துவதும் பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என்பதை இலகுவில் கண்டு கொள்ளலாம். எதிர் கட்சி அரசியல் நடைமுறை பழக்கங்களைத் தவிர்த்து, குறைந்த அளவேனும் அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக மாறுவதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நிச்சயமாக நகர முடியும்.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலம் எமது மக்களுக்கு நல்லதாக அமைய எமது அரசியல் அமைப்புகளும் தலைவர்களும் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலமே பேரினவாதிகளின் எதிர்ப்புகளை வெல்ல முடியும்.

தமிழ் பேசும் மக்களின் நலன்களை மீட்கும் பொருட்டு எம்மாலான அனைத்தையும் செய்ய பின் நிற்கக் கூடாது என்பதை எமது அரசியல் தலைவர்கள் என்றும் மனதில் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கலந்துரையாடல்கள் மூலம் கருத்தொருமைப் பாட்டினை எற்படுத்தி காத்திரமான பங்களிப்பினை அவர்கள் வழங்க வேண்டுமென விரும்புகிறோம். புதிய வருடத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவர உங்களால் முடியும்.

பேச்சுவார்த்தைகளின் மூலமான நியாயமான நிரந்தர தீர்வு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பு, பன்முக அரசியலுக்கு அங்கீகாரம் என்பவற்றை மதிக்கும் அனைவரும் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் சமாதான ஒன்றியம்
09/01/2008
Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom

tamilforumforpeace@gmail.com