இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய இன உரிமைப் போராட்டத்தில் முதுகெலும்பாக நின்று போராடியவர்கள் கிழக்கு மாகாண மக்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. தனிமனித நலன்களை மட்டும் முதன்மைப் படுத்தும் வழி மாறிய அப்போராட்டத்திலிருந்து தம்மை விடுவித்து சுதாகரித்துக் கொண்ட மக்கள் மீண்டும் அதே வழிமுறைகளை நாட விரும்ப மாட்டார்கள் என்பது உறுதி.
பல்வேறு மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் பன்முக அரசியலை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உறுதியுடன் நிலைநாட்டி நமது கருத்துக்களின் நியாயத் தன்மையை ஜனநாயக முறைகளினூடான செயல்பாடுகளினால் மக்கள் ஏற்றுக் கொள்ள பிரயத்தனம் செய்வதன் மூலமே நாம் கடந்து வந்த கறை படிந்த துயரமிக்க படிகளை நீக்கி எதிர்காலத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
அழிவுகளுக்கு மட்டுமே வழி கோலும் ஏகபோக பிரதிநிதித்துவத்தை பயமுறுத்தல் பலாத்காரம் படுகொலைகள் போன்ற வழிமுறைகளினூடாக உருவாக்க முனையும் செயல்வடிவங்களே தமிழ் பேசும் மக்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றினை எதிர்க்கும் மனோபாவங்களை வலிந்து உறுதியுடன கடைப்பிடிப்பது இன்று நாம் செய்ய வேண்டிய தியாகங்களில் முதன்மையானதாகும். இதற்க்கான பக்குவமும் உறுதியும் இல்லாத இடத்து எமது ஏனைய தியாகங்கள் அனைத்தும் பயனற்றவையாகின்றன. இது பொதுநலத்தினை பின்தள்ளி சுயநல முனைப்புகள் அழிவுகளை ஏற்படுத்தும் உணர்வுகளைத் தூண்டி தவறான செய்கைகளுக்கு உரமிடுவதை தெளிவாக காண முடியும்.
தமிழ் பேசும் மக்களை பிளவு படுத்தி பலவீனப்படுத்துவது, அவர்கள் தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக கருதும் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்தி அவர்களை நிர்க்கதியாக்குவது, பௌத்த சிங்கள சின்னங்களை நிறுவி பெரும்பான்மை மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுவது, எமது பிரதேசங்களின் பொருளாதார மையங்களிலிருந்து எமது மக்களை வெளியேற்றி தமது கட்டுப்பாட்டை உறுதி செய்வது, என பலதரப்பட்ட முயற்சிகளை சிங்கள அரசியல் சத்திகள் கூட்டாக முன்னெடுக்கும் போது எமது ஒற்றுமையைப் பேணும் முயற்சிகளை ஊக்குவிப்பதே தலையாய கடமையென புரிதல் கஷ்டமானதல்ல. எனவே எமது அரசியல் செயற்பாடுகள் ஒற்றுமைக்கு எதிர்வினையான உணர்வுகளை ஏற்படுத்தா வண்ணம் அமைவது அவசியமானதாகும்.
பேரினவாத சக்திகள் தமிழ் பேசும் மக்களை பிரித்து பலவீனப் படுத்துவதில் வெற்றி பெற்றனர். இந்த பேரினவாத சத்திகளுக்கு உறுதுணையாகும் வகையில் உணர்வு ரீதியாகவும் தமிழ் பேசும் மக்களை துண்டாடுவதாக எமது செய்கைகள் அமையக் கூடாது.
துமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு ஆரம்ப காலங்களில் தமக்கு மற்றைய தமிழ் அரசியல் அமைப்புகள் உதவி புரியவில்லை என்ற மனகசப்புகள் இருக்க நியாயமுண்டு. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பாகமாக இருந்தவர்கள் என்ற வகையில் உங்களுடன் உறவு கொள்வதில் அவர்களுக்கு இருக்கக் கூடிய சங்கடங்களிலும் நியாயமிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய சமூகம் ஒன்றை உருவாக்குவதில் புதிய அணுகுமுறைகள் தேவை என்பதால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படும் நிகழ்வுகளுக்கு அத்திவாரமிடுதல் அவசியமாகும்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சித் தேர்தலில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அனுபவிக்கும் உரிமைகளைக் கூட தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மறுதலிப்பது எமது தப்பெண்ணங்களையும் நம்பிக்கையின்மையையுமே மையமாக கொண்டிருக்கும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மற்றவரின் ஜனநாயக உரிமையை மதிக்கும் பண்பாட்டினை முதன்மைப்படுத்துவது தேர்தலில் நாம் அடையும் முதலாவது வெற்றியாக அமையும்.
கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டும் அல்லாமல் வடக்கு மாகாண மக்களுக்கும் அரசியல் பண்பாடுகளை எடுத்துக்காட்டும் மைல்கல்லாக இந்த தேர்தல் பரிணமிக்க முடியும். அனைத்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடைமுறைகளிலும் பன்முக அரசியல் பற்றிய சரியான சிந்தனை முறைகளை இந்த தேர்தலில் நடைமுறைகளின் மூலம் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் கொணடுவர முடியும்.
இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து எமது மக்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வல்லமை கிழக்கு மாகாண மக்களுக்கு நிறையவே உண்டு. அனைத்து தமிழ்பேசும் மக்களின் நலன்களில் அக்கறை உள்ள எவரும் இந்த தேர்தலின் மூலம் சாதிக்க வேண்டியதென்ன என்ற எமது கருத்தை புறம் தள்ள மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
தேர்தல் முடிவில் கிழக்கு மாகாண மக்களின் இன்னல்களைப் போக்கும் வகையிலான ஒற்றுமையான செயல்பாடுகளுக்கு இத்தேர்தல் களம் அமைத்துத் தர வேண்டுமேயன்றி எமக்கிடையிலான வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தி மேலும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்க இடமளிக்கக் கூடாது. இடம்பெயர்ந்து அல்லலுறும் எமது மக்களின் மீள்குடியமர்வுக்கும் புணர்வாழ்வுக்கும் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாகத்துடன் செயல்படும் சூழலை தோற்றுவிப்பதில் வெற்றி காண்போம்.
பயணம் போகும் பாதை சரிவர செப்பனிடப்படாத விடத்து பதவிகள் பாவங்களைப் புரியவே துணையாக இருக்கும் என்பது எமது கடந்த வரலாறு. இதனை மாற்றியமைக்கும் நிகழ்வுகளே எமது மக்களின் எதிர்பார்ப்பும் ஆதங்கமும் ஆகும். கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் புதிய நிகழ்காலமொன்றை தோற்றுவித்து அமைதியையும் சமாதானத்தையும் தோற்றுவிக்கும் எமது பயணத்தின் ஒரு மைல்கல்லாக இத்தேர்தலை மாற்றுவீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.
- தமிழ் சமாதான ஒன்றியம்
06/02/2008
Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom
tamilforumforpeace@gmail.com