Thursday, 11 December 2008

மதிப்பிற்குரிய தமிழக அரசியல் தலைவர்களுக்கும் திரையுலக தலைவர்களுக்கும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் தாழ்மையான வேண்டுகோள்!

அன்புடையீர்!

இலங்கைத் தமிழர் துயர் கண்டு கண்டனக் குரல்களை எழுப்பி மத்திய அரசை அவர்கள் துயர் தீர்க்க ஆவன செய்யுமாறு நீங்கள் வலியுறுத்துவது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பெரும்பான்மையான அனைத்து அரசியல் கட்சிகளும்; ஒருமித்த குரலோடு இவ் வேண்டுகோளை விடுக்க முயல்வது மத்திய அரசினை செயற்பட வைக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் தீர தமிழக அரசியல் தலைவர்களினதும் திரையுலக தலைவர்களினதும் ஏகோபித்த ஆதரவிற்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த முப்பது வருட இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளைக் கடந்து வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். பல சகோதரப் படுகொலைகளே எமது விடுதலைப் போரின் முக்கிய குறிக்கோளாக பரிணமித்திருப்பதே அதன் சாதனையாகவும் தமிழ் மக்களின் வேதனையாகவும் அவர்களின் இழப்புகளுக்கு காரணமாகவும் இருப்பதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. இதனையே முதன்மைப் படுத்தி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பி பலனளிக்காத பலமாக பாலைவனத்திற்கு தமிழ் மக்களை நகர்த்தும் முனைப்புகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்து தமிழ் இளைய பிராயத்தினரை தற்கொலைக்கு தயார்படுத்துவதை நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இலங்கைத் தமிழரின் துயரம் கண்டு பொங்கியெழும் தமிழக மக்களின் ஆதரவு விடுதலைப் புலிகளின் அழிவுப் பாதைக்கு உடந்தையாகி தடம் புரளக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இலங்கை அரசியல் சூழ்நிலைகளை நீங்கள் ஓரளவு புரிந்து வைத்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறோம். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டி குரல் கொடுக்கும் அதே நேரம் இலங்கை பேரினவாத சக்திகளின் குரல்களுக்கு உணவளிப்பனவாக உங்கள் ஆதரவு செயல்படாத தன்மையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் இலங்கையில் தமிழ் மக்களின் இரத்தக் களரி தொடர்ந்து ஓடுவதற்கே உங்கள் ஆதரவு உறுதுனையாகும்.

தமிழ் மக்களுக்கு சமமான நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பான்மை சிங்கள இனமக்களில்; பெரும்பான்மையோர் ஓரளவு ஏற்றுக் கொண்ட போதும் அவர்களில் ஒரு சிறுபான்மையோரான பௌத்த பேரினவாதத்தை வலியுறுத்தும் சத்திகளின் எதிர்ப்புகளை மீறி அவர்களால் செயற்பட முடியாத சூழ்நிலை காணப்படுவதே இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு நடைமுறைப் படுத்தப்படாமைக்கு முக்கிய காரணமாகும். இப் பேரினவாத சக்திகளின் கரங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் செயல்பாடுகள் அமைதல் பாதகமானதாக அமையும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் தமிழகத்தில் 50 கோடி தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதும், தமக்கென வேறு நாடு எதுவும் இல்லையென்பதும் என்ற வாதங்களே பேரினவாத இனவாதிகளின் பிரச்சாரமாக இனவாத தூண்டுதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகமும் இந்தியாவும் சிங்கள மக்களின் இறைமைக்கும் பாதுகாப்பிற்தும் உத்தரவாதம் அளிக்கும் உறுதிமொழிகளே இவர்களை பலவீனப்படுத்தும். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இது நகைப்பிற்குரியதாக தோன்றினாலும் சற்று சிந்தித்தால் இதுவே உண்மை என்பது புலனாகும்.

இத்தனை இழப்புகளின் பின்பும் இன்றைய இலங்கை அரசு நியாயமான தீர்வினை முன்வைக்க முனைப்புடன் செயல்படாமை வேதனை அளிக்கிறது. சர்வ கட்சி மகாநாட்டு முடிவுகள் சாதுரியமாக பின் போடப்பட்டுக் கொண்டு செல்வது இலங்கை அரசின் நோக்கங்களை கேள்விக்குறியாக்கின்றது. இலங்கை அரசு இனவாத சத்திகளுக்கு அடிபணிந்து தமிழ் மக்கள் மீது நியாயமற்ற நடுநிலையான சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ள முடியாத தீர்வினை திணிக்காமல் பார்த்துக் கொள்ளும் பாரிய பொறுப்பினை இந்திய அரசு புறந்தள்ளி வைக்காமல் செயல்படும் உந்துசத்தியாக தமிழக அரசியல் தலைவர்கள் பங்களிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களிடையே ஜனநாயக அரசியலை வளர்க்க விரும்பும் அரசியல் சத்திகளுக்கு உங்கள் ஆதரவு பெருக வேண்டும். அவர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி நிலைநாட்ட உங்களால் பெருமளவில் உதவ முடியும். இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையே தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும். அவர்கள் வலிமையை ஒருமுகப்படுத்தும். மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் பண்பினை இலங்கைத் தமிழர் அரசியலில் வலிமைப்படுத்தும் வகையில் உங்கள் செல்வாக்கு அமைய வேண்டும். சகோதரப் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு உங்கள் வலிமை பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகள் வேற்றுமைகள் பல இருப்பினும் ஒற்றுமையுடன் செயல்பட உங்களால் ஊக்கமும் உற்சாகமும் உதவியும்; அளிக்க முடியும். விடுதலைப்புலிகளின் தவறான போக்கினை அவர்களுக்கு வலியுறுத்தி அழிவுப்; பாதையிலிருந்து அவர்களை மீட்க வழியமைக்க வேண்டும்.

போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினை வலியுறுத்தி நிற்கும் உங்களது கோரிக்கைகள் பயனற்றனவாக போகாமலிருக்க வேண்டுமெனில் அதனை சாத்தியப்படுத்தும் ஏனைய அம்சங்களையும் அதனுடன் சேர்த்து வலியுறுத்த வேண்டும். முன்னைய போர் நிறுத்த ஒப்பந்தங்கள் விடுதலைப் புலிகளினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழ் போராளிகளும் தமிழ் அரசியல் தலைவர்களும் கல்விமான்களும் படுகொலை செய்யப்பட்டனர். இன்னுமொரு போருக்கான முஸ்தீபு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆயத தளபாடங்களை வேண்டிக் குவிக்கவும் அவற்கான நிதியினை மக்களிடம் வசூலிக்கவும் கேலிக்கூத்தாக சமாதானப் பேச்சு வார்த்தைகளினை நடத்தவுமே போர் நிறுத்தம் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் அன்றாட தேவைகளும் அவர்களின் துயரம் களைய செய்யப்பட வேண்டியவைகளும் பலிக்கடாக்களாகவே பயன்படுத்தப்பட்டன. மேற்படி நிகழ்வுகள் இந்த முறையும் நடைபெறாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தையும் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் சிறைக்கைதிகளாக இல்லாமல் தாம் விரும்பிய பகுதிகளில் வாழ அனுமதிக்கும் உரிமையையும் விடுதலைப் புலிகளை வழங்கும்படி நிர்ப்பந்திக்கும் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினை வலியுறுத்துவது மட்டுமே சாத்தியமானதும் சரியானதும் தமிழ் மக்களுக்கு பலமும் பாதுகாப்பும் அளிப்பதுமாக இருக்க முடியும்.

இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும்படி மத்திய அரசினை நிர்பந்திக்கும் உங்கள் ஒருமித்த செயல்பாடுகள் பலனளிக்கவேண்டுமென நாம் விரும்புகிறோம். மறுபுறத்தில் தமிழ்நாடு எல்லா வகையிலும் சிங்கள மக்களின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் என்ற உண்மையும் தெளிவாக பிரச்சாரப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் இனவாத சத்திகளை சீண்டிவிடவே உங்கள் ஆதரவு பேரினவாதிகளால் பயன்படுத்தப்;படும். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள அவர்களுடன் உறவை வலுப்படுத்துவதே பயனுள்ளதாகும்.

தனிநாட்டுக் கோரிக்கை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய அழிவுகள் பற்றி நாம் விபரிக்க வேண்டியதில்லை. தமிழ் நாடும் ஒருகாலகட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடியதும் அதன் பாதகத்தன்மைகளைப் புரிந்து இந்திய மாநிலங்களில் ஒன்றாக உரிமைகளுடன் வாழ ஏற்றுக் கொண்டதும் அதன் மூலம் பாரிய அழிவுகள் தவிர்க்கப்பட்டு இன்று வலிமை பொருந்திய பொருளாதார சுபீட்சமுடைய மாநிலமாக திகழ்வதை நினைவு கூரும்படி கேட்டுக் கொள்கிறோம். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களும் தனிநாட்டுக் கோரிக்கையினைன கைவிட்டால் தமிழ் நாட்டினை ஒத்த அல்லது அதிலும் மேன்மையான உரிமைகளைப் பெறவது சாத்தியமானது என்பதை நீங்கள் வலியுறுத்த வேண்டும். அதனை எமது மக்கள் பெற்றுக் கொள்ளவும் நீங்கள் பெருமளவில் உதவ முடியும். தமிழ் மக்களுக்கு பலமளிப்பதும் பாதுகாப்பு வழங்குவதுமான போர் நிறுத்தம் ஒன்றினை வலியுறுத்தி விடுதலைப் புலிகளை சமாதானப் பாதைக்கு இட்டுச் செல்வதில் நீங்கள் பெருமளவில் செயலாற்ற முடியும். உங்கள் செயல்பாடுகளின் சாதக பாதக தன்மைகளை உணர்ந்து செயல்படுவீர்களென இங்கு அல்லலுறும் தமிழ் பேசும் மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.

இறுதியாக மறுபடியும் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் தீர தமிழகத்தின் ஏகோபித்த ஆதரவுக் குரல்களுக்கு எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைக்கப் பெற உங்கள் ஆதரவு பாரிய ஆதாரமாக அமைய வேண்டும். உங்கள் ஆதரவு மேலும் தொடரவும் மேலும் செழுமை பெறவும் வேண்டுகிறோம்.

தமிழ் சமாதான ஒன்றியம்

10-12-2008