புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சிங்கள மொழி பேசும் மனிதர்களே!
இலங்கையில் நடைபெறும் போரிலிருந்து தப்பி வந்து போரைப் பயன்படுத்தி அகதி அந்தஸ்து பெற்று புலம் பெயர்ந்த நாடுகளில் கடந்த கால வடுக்களுடனும் ரணங்களுடனும் ஆனால் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் ஆனந்தமாகவும் வாழ்கின்றோம் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. நமது குழந்தைகள் தொடர்பான கவலையின்றி வாழ்கின்றோம். ஏனெனில் அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பும் கல்வியையும் வாழ்க்கையையும் புலம் பெயர்ந்ததன் மூலம் வழங்கியிருக்கின்றோம் என்ற பெருமையும் நம்பிக்கையும் நமக்கு உண்டு.
இந்த நிலைமை இலங்கையில் வாழும் மனிதர்களுக்கும் குழந்தைகளுக்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. இவர்களது வாழ்க்கையை அதன் தரத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களுடையது என்றால் மிகையல்ல. ஆனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த புலம் பெயர் நாடுகளிலிருந்து கொண்டு வன்முறை அல்லது போருக்கு அதரவு அளிப்பது மனசாட்சி இல்லாத ஒரு செயற்பாடு. ஏனெனில் இந்த வன்முறை பாதையும் போரும் இந்த மனிதர்களின் உரிமைகளையும் சுநத்திரத்தையும் மேலும் மேலும் மறுக்கின்றமையும் மற்றும் குழந்தைகள் உடல் உள நோய்க்கு உள்ளாவதையுமே விளைவாக கிடைக்கின்ற யாதார்த்தமான ஒரு உண்மை. ஆகவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் வன்முறைக்கோ போருக்கோ ஆதரவளிக்காது இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதன் மூலம் இன பிரச்சனைக்கு தீர்வு ஒன்றினைக் காண உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்பமுடியும்.
புலம் பெயர்ந்த நாடுகளில் நாம் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை எழுத்துரிமை அதற்காக போராடும் உரிமைகளை குறைந்தளவிலாவது ;அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி அதன் வரையறைகளுக்குள் இருந்து நமது சமாதானத்தை அமைதியை தீர்வை நோக்கிய செயற்பாடுகளை முன்னேடுக்கலாம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வாழும் மனிதர்கள் இவ்வாறு செயற்படுவதன் மூலம் தமது வாழ்வின் மீதான பொறுப்புக்களை குறைந்த அளவிலாவது நிறைவேற்றலாம். இதற்கு மாறாக வன்முறை பாதைக்கும் போருக்கும் ஆதரவு அளிப்பது நமது குற்ற உணர்வுகளும் பழி தீர்க்கும் செயற்பாடுளுமே. இது ஆரோக்கியமான வாழ்வல்ல. இவ்வாறன வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து சுய பிரக்ஞையில் சுயமாக செயற்படுவதன் மூலம் நமக்கும் இலங்கை வாழ் மனிதர்களுக்கும் வாழ்வின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வழி காட்டலாம்.
நமது இன சாதிய மொழி மற்றும் இயக்க சார்புகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களாக ஒன்றினைந்து இலங்கையில் போரையும் வன்முறையையும் நிறுத்துவதற்கும் அங்கு வாழும் மனிதர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் அமைதியான ஆனந்தமான வாழ்வுக்கும் நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் செயற்படுவற்கான அழைப்பிதழ் இது.
நன்றி
இலங்கை மற்றும் புலம் பெயர்ந்து வாழும் சமாதானத்தை அமைதியை விரும்பும் மனிதர்கள் சார்பாக
- மீராபாரதி
http://www.keetru.com/literature/essays/meerabharathy_3.php
Thursday, 19 June 2008
போரை நிறுத்த வேண்டு கோள்
Posted by Tamil Forum for Peace at 11:41