Saturday 17 May 2008

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு எமது அஞ்சலி

- தமிழ் சமாதான ஒன்றியம்
உயிர்க் கொலைகளாலும் வன்முறையாலும் எமது மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடமுடியாது. கடந்த மூன்று சகாப்தத்திற்கு மேலாக உச்சமடைந்துள்ள ஆயுத கலாச்சாரமும் அழிவு அரசியலும் எமது மக்களின் வாழ்வை பல்வேறு தளங்களிலும் பல்வேறு பரிமாணங்களிலும் பின்னடைய வைத்துள்ளது. கடந்த கால, நிகழ் கால சமூக விளைவாக தீங்கு நிறைந்து நிற்கும் இந்த அழிவு அரசியல் வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி எமது மக்களின் குறைந்தபட்ச நம்பிக்கையான வாழ்வையும் சூறையாட தொடர்ந்தும் படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டவிழ்த்து விடுவதை நமது மக்களின் உண்மையான நலனில் நின்று கண்டிக்க வேண்டி உள்ளதுடன் இச்செயல்பாடுகளை நிறுத்துவதற்கு எம்மாலான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் சமூகத்திற்குள் தோன்றிய சகோதர படுகொலைகள் நமது மக்களின் உண்மையான விடுதலையையும் ஜக்கியத்தையும் வெற்றியையும் பெரிதும் பாதித்து சிதைத்து அடிப்படை வசதிகளைக்கூட நிறைவு செய்ய முடியாமல் அல்லல் படும் சமூகமாக கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழர் தாயகமெங்கும் கைம்பெண்களையும் அனாதைகளையுமே விளைவுகளாக்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் பாரபட்சமின்றி புரிந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும் இந்த அழிவு அரசியலின் கோரப்பசிக்கு இரையாகி உள்ளமை கொடூரமான செயலாகும். தமிழ் சமூகத்திற்குள் சமூக சிந்தனையும் சுய ஆளுமையும் கொண்ட ஒரு சில பெண்களில் மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற உந்துதலால் பொது வாழ்வுக்குள் காலடி வைத்தவர். மூன்று தசாப்த காலமாக மக்களின் துயர் தீர்க்கும் வாழ்வில் தம்மை அர்பணித்து வாழ்ந்தவர்.

தொடரும் யுத்தத்தைக் காரணம் காட்டி மக்களின் நாளாந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்க முடியாது என்பதை முதனிலைப்படுத்தி மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய பணியால் பல்வேறு அரசியல் சத்திகளுடனும் சமூக நிறுவனங்களுடனும் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்புகள் மதிக்கத்தக்கவை, மக்களால் நினைவு கூரத்தக்கவை.

துப்பாக்கிகளின் பாசிச அரசியலுக்கு அஞ்சாது துணிகரமாக செயலாற்றிய சமூகப்பற்றுள்ள மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதானது தமிழ் தேசியத்தின் வழிதவறிய அரசியலின் கோர முகத்தின் அடையாளமாக உள்ளது.

தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பினை ஏற்படுத்திய இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் தமிழ் மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களா? இதனைப் புரிந்தவர்கள் நமது சமூகத்தின் அவல நிலையை அலட்சியம் செய்து தமது காழ்ப்பு உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கொலைவெறியினை அரங்கேற்றுவதையே வீரமாக விடுதலையாக விளம்பரப்படுத்துகிறார்கள். தமிழ் மக்களுக்கு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யும் அனைவரையும் கொலை செய்வதை விடுதலையின் தாகம் என்றால் சுடுகாடு மட்டுமே மிஞ்சும். இதே வழிமுறை இன்னும் தொடருமாயின் அனைத்து தமிழ் மக்களையும் விடுதலையின் தாகம் விழுங்கி மயான பூமியே மிச்சும்.

ஏன்றாவது ஒருநாள் எங்களின் ஒருவனது துப்பாக்கியே என்னை அமைதியாக்கிவிடும் என்று கூறியபடி துணிவுடன் நமது சமூகத்தின் அவலத்தை ஆவணப்படுத்திய மருத்துவத்துறை பேராசிரியை ராஜினி திரணகம அவர்களை பலியெடுத்த துப்பாக்கிகளே இப்போது மகேஸ்வரி வேலாயுதம் அவர்களையும் பலியெடுத்துள்ளது. அவரது உன்னத பணிக்கு அவரது உயிரைப் பறித்தெடுத்தமை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்ற மட்டும் சேவை செய்த மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு தமிழ் சமாதான ஒன்றியம் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் பிரிவால், வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாத சொல்லொணா துயரத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமிழ் சமாதான ஒன்றியம் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கிறது.

மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் மக்களை நேசித்ததாலும் மக்களுக்காக அயராது பணி செய்ததாலுமே படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ் சமாதான ஒன்றியம் அவரது படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது. இந்த அவலமிகு அழிவை தடுத்து நிறுத்தும் தார்மீக கடமையும் உடனடிப் பொறுப்பும் நமது மக்களின் இயல்பு வாழ்க்கையை நேசிக்கும் அனைத்து சமூக சத்திகளுக்கும் உள்ளது. இப்படுகொலைக்கு காரணமான மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்காத அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைப்பதற்கான சமூக, அரசியல் வேலைத் திட்டத்தினை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறது. தொடரும் யுத்தமும் தொடரும் படுகொலைகளும் நமது மக்களை மயானத்திற்கு அழைத்துச் செல்வதை தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சத்திகளையும் தமக்கிடையிலான வேறுபாடுகளை முதன்மைப்படுத்தாது பொதுவான வேலைத்திட்டமொன்றில் செயல்பட விளையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதற்கான விட்டுக் கொடுப்புகளுக்கு மனத்திடம் கொள்வதே மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு நம்முடைய உண்மையான நன்றி கூறலும் இறுதி அஞ்சலியும் ஆகும். மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் வீண்போகக் கூடாதென்ற உறுதியுடன் புதிய பாதையினை செப்பனிட்டு செயல்பட ஊக்கம் அளிக்கும்படி அனைத்துத் தமிழ் சமூக, அரசியல் அமைப்புகளிடமும் பொது மக்களிடமும் தமிழ் சமாதான ஒன்றியம் ஆதரவு கோருகிறது.
17/05/2008

Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom
tamilforumforpeace@gmail.com